1.    கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து (1-7-1935) கோவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்ற, கோவை நகரத்தில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார்.  கல்லூரியில் அவர் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றவில்லை, முனைவர் பட்டம் பெறவில்லை என்ற போதும், இன்றுவரை வணக்கத்திற்குரிய தமிழ்ப் பேராசிரியர் பலரிடம் பயின்றதன் காரணமாகவும் இதுநாள் வரை 50 ஆண்டுகளுக்கு மேலாக பழந்தமிழிலக்கியத்தோடு மட்டுமல்லாமல் நவீனத் தமிழிலக்கியத்தோடும் இடையறாத உறவு கொண்டவராக இருக்கிறார். மார்க்சியத்தோடு அவர் கொண்ட பெரும் ஈடுபாடு காரணமாக வளமான மார்க்சிய நோக்கில் தமிழிலக்கிய ஆய்வில் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டு 25க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்களைப் படைத்துள்ளார். கட்சி மார்க்சியரின் இறுக்கமான பார்வையிலிருந்து நெடுந்தொலைவு விலகி வந்தார். ஆழ்ந்த தமிழிலக்கியக் கல்வி இவருக்குள் செறிவு பெற்றதன் காரணமாகவும் இவரது மார்க்சிய நோக்கோடு தமிழிலக்கிய ஆய்வும் இணைந்ததன் காரணமாகவும் தமிழறம், தமிழ்வாழ்வு என்று ஓயாமல் இவர் பேசுகிறார். தமிழறம் என்பதை சமத்துவம் என்றும் சமதர்மம் என்றும் பொருள்படுத்துகிறார். இரஷ்ய மார்க்சியம், சீன மார்க்சியம் என்பது போல தமிழ் மார்க்சியம் என்பதை இவர் முன்மொழிகிறார். 

2.    தமிழிலக்கியக் கல்வியோடு மட்டும் இவரது ஈடுபாடு நின்றுவிடவில்லை.  தொடக்கக்காலம் முதலே தமிழகத்தில் சிறப்பாக வளர்ச்சிப் பெற்று வந்த சிற்றிதழ் இயக்கத்தோடு இவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தமிழிலக்கிய வளர்ச்சிக்கு செல்லப்பா, க.நா.சு, நா.பிச்சமூர்த்தி முதலியவர்களைப் போலவே வெங்கட் சுவாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி முதலியவர்களும் சிறந்த பணியாற்றியதை இவர் பாராட்டுகிறார்.  இவர்களோடு பல சமயங்களில் உடன்பாடும் சில சமயங்களில் முரண்பாடும் கொண்டவராக இருந்ததோடு தானும் நாற்பதாண்டுகளுக்கு மேலாக தொடக்கத்தில் ‘புதிய தலைமுறை’ பிறகு ‘வானம்பாடி’ இவற்றுக்குப் பிறகு நண்பர்கள் சிலரோடு இணைந்து ‘மார்க்சிய ஆய்விதழ்’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’ இதழ்களையும் நடத்தினார். அண்மைக் காலத்தில் ‘தமிழ் நேயம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். இவ்வாறு சிற்றிதழ் இயக்கத்தோடு ஈடுபட்டதன் காரணமாக தான் சார்ந்த தமிழிலக்கிய பார்வையை பல தளங்களில் விரிவுபடுத்தியிருக்கிறார்.  

 

new-ap62.jpg

3.    பழந்தமிழிலக்கியம் போலவே பாரதிக்குப் பிற்பட்ட நவீனத் தமிழிலக்கியமும் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தூண்டுதலாக அமைந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியத்திற்கு உள்ள பெருமைகளிலிருந்து சற்றும் குறைவில்லாத அளவிற்கு நவீனத் தமிழிலக்கியமும் வளமும் ஆற்றலும் கொண்டது என்று இவர் தன் ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்திருக்கிறார். 

4.    சிற்றிதழ் இயக்கத்தின் வழியே இவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட திறனாய்வுப் பார்வை, பழந்தமிழிலக்கியத்தின் ஆற்றலைக் கண்டறிவதற்குப் பெரும் வாய்ப்பாக இருக்கிறது என்கிறார். தொல்காப்பியரின் திணைக் கோட்பாட்டை தமிழிலக்கியம் முழுவதற்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்.  மார்க்சியம் மட்டுமல்லாமல் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் முதலிய நவீனகால அணுகுமுறைகளை ஆழமாக பயன்படுத்துவதன் மூலமே தமிழிலக்கியத்தைத் தற்காலச் சூழலுக்கு ஒத்த முறையில் வாழ்விக்கவும் முடியும் என்பதை தன் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளார்.  மறைமலையடிகள், தெ.பொ.மீ. வ.சுப.மாணிக்கம், முதலியவர்களிடம் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு சற்றும் குறையாத அளவுக்கு க.நா.சு., பிச்சமூர்த்தி, பிரமிள், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி இறுதியாக ஜெயமோகன் முதலியவர்களிடம் இவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். 

Appa images 24 c.jpg

 5.    வெற்றுத் தமிழ் புலமையோ பெருமித உணர்வோ இன்று தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படாது என்கிறார். அண்மைக்காலத்தில் செம்மொழி என்று தமிழுக்கு இந்திய அரசு வழங்கிய ஏற்பு ஒரு மாபெரும் வாய்ப்பு மட்டுமல்ல. தமிழனைக் காப்பதற்கான இறுதி வாய்ப்பு என்ற முறையிலும் இவர் தன் ஆய்வைச் செய்கிறார். இந்திய நாகரீகம் என்பதன் மாபெரும் தொகுப்பில் தமிழர் நாகரீகத்தின் பங்களிப்பு பெரிது என்பதை மெய்ப்பிக்கும் முறையில் தமிழியல் ஆய்வை தமிழறிஞர் தொடர வேண்டும் என்கிறார். தமிழிசை, தமிழ் மருத்துவம், தமிழரின் சிற்பத்திறன், தொழில்திறன், வேளாண்மைத் திறன், கட்டிடக் கலைத்திறன், கணிதம், அறிவியல், மெய்யியல், முதலியவற்றில் திறனான ஆய்வுகளை முன்னெடுப்பதன் மூலம் இடைக்காலத்தில் தமிழர் இழந்த மேன்மையை நம் காலத்தில் மீட்டுக் கொள்ள முடியும் என்கிறார். சிந்து சமவெளி ஆய்வுகள் மேலும் தொடர வேண்டும் என்கிறார். 

6.    பதவி, பணம், புகழ் முதலியவற்றின் பின் சென்று தமிழறிஞர் தம்மை சிறுமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறார். சங்ககாலத் தமிழ்ச் சான்றோர் அக்கால அரசியலில் கொண்டிருந்த ஈடுபாடு இன்றும் நமக்குத் தேவை என்கிறார். கட்சித்தலைவர்கள/ அரசியல் தலைவர்கள் தமிழுக்குச் செய்த மாபெரும் துரோகத்தைத் தமிழறிஞர் ஏற்க இயலாது என்கிறார்.  ஈழத் தமிழகத்தின் விடுதலை தவறிப் போனது. இந்திய தமிழருக்கு எதிர்காலத்தில் என்ன விடுதலை காத்திருக்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார். 

7.    தமிழியல் ஆய்வு என்பது இலக்கியம், இலக்கணம் சார்ந்த ஆய்வாக இருக்க முடியாது என்கிறார். தற்கால தமிழ் மக்களின் வாழ்வியல் நெருக்கடி பற்றிய ஆய்விலும் தமிழறிஞர் ஈடுபட வேண்டும் என்கிறார். தமிழ் உணர்வு என்பது மொழியுணர்வாக மட்டும் இருக்க முடியாது. தமிழ் வாழ்வு, தமிழறம், தமிழ்நாட்டு இயற்கை, தமிழ்நாட்டு நீர் மற்றும் நிலவளம், தமிழகத்தின் தொழில்வளம் எனப் பலவற்றையும் சார்ந்தவர்கள் இருக்க முடியும் என்கிறார். வள்ளுவர், இளங்கோ, பாரதி, பாரதிதாசன், போன்ற தமிழ்ச் சான்றோர்களுக்கு நாம் வாரிசுகள் என்ற முறையில் பணியாற்ற வேண்டும் என்கிறார். 

appa b3 books.jpg

 8.    தமிழிலக்கியத்தில் மூன்றில் ஒரு பகுதி பக்தி இலக்கியம்.  பக்தி இலக்கியம் கற்பதற்கு பகுத்தறிவுப் பார்வை போதாது என்கிறார். சமயம் பற்றிய நம் ஆய்வு விரிவுபட வேண்டும் என்கிறார்.  தமிழ் நமக்கு உயிர் என்று பாரதிதாசன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாம் மெய்ப்பிக்க வேண்டும் என்கிறார். இவையெல்லாம் ஞானியின் கருத்துகளாக மட்டுமில்லை, சுமார் 5000 பக்கங்கள் தோறும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் அனைத்திலும் இக்கருத்துக்களை மெய்ப்பிக்கும் முறையில்தான் எழுதுகிறார்.  ஞானியின் வாழ்வுக்கும் அவரது சிந்தனைக்கும் இடையில் இடைவெளி என்பது சிறிதளவுமில்லை. 

9.    புகழ் பெருமைகளில் இவருக்கு அக்கறையில்லை. தமிழுக்கு நேர்ந்திருக்கும் நெருக்கடிகள் இவரைப் பெரிதும் வருத்துகின்றன. இந்தியாவில் தமிழுக்கும் தமிழருக்கும் இந்த நெருக்கடிகள் எவ்வாறு ஏற்பட்டன என்பது பற்றித் தம் கட்டுரைகளில் விரித்துரைக்கிறார். உலகமயமாதல் என்னும் பெயரில் வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு இந்திய அரசு இடம் கொடுத்ததன் விளைவாகத் தமிழுக்கும் தமிழ் மக்களும் ஏற்பட்ட சீரழிவு பற்றிப் பேசுகிறார். இந்திய அரசோடு ஒத்துழைக்கும் தமிழின தலைவர்களைச் சாடுகிறார். சமதர்மமின்றி நமக்கு எதிர்காலம் இல்லை என்பதை உரத்துச் சொல்கிறார்.  இவரது குரலுக்குள் சங்கத் தமிழ்ச் சான்றோரின் குரலும் சேர்ந்தே ஒலிக்கிறது. 

10.    தமிழிலக்கியம் முழுவதையும் மறுவாசிப்பு என்ற முறையில் ஆய்வு செய்யும்போது தமிழிலக்கியத்திலிருந்து நம் காலத்திற்கான பொருளைக் கண்டறிய முடியும் என்று எழுதுகிறார். வள்ளுவரும் இளங்கோவும் சாத்தனாரும் இன்றும் நமக்குத் தேவை என்கிறார். இலக்கிய நயம் பாராட்டுவது போதாது என்கிறார். இலக்கியத்தினுள் இருக்கும் ஆற்றலை நாம் கண்டெடுக்க வேண்டும் என்கிறார். இலக்கிய ஆய்வு என்பது சமூகம் மற்றும் வரலாற்றியல் ஆய்வு என்பதையும் கடந்த இறுதியில் மெய்யியல் ஆய்வில் முடிய வேண்டும் என்கிறார். வாழ்வுக்கு அர்த்தம் தேடும் இருத்தலியலைப் பாராட்டுகிறார். வள்ளுவரின் அறவுணர்வையும், இளங்கோவின் புரட்சிகர உணர்வையும், கம்பனின் நுண்ணுணர்வையும் இன்றும் நம்மால் கடைப்பிடிக்க இயலுமானால் பாரதி கூறியது போல தமிழர் சாதி அமரத்துவம் உடையது, அழியாது என்று நம்புகிறார். தமிழறிஞர் பலரிடமும் குறைவில்லாத மரியாதை கொண்டிருக்கும் ஞானி தன்னைத் தமிழிலக்கிய மாணவன் என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறார். 

11.    தமிழகத்தில் செயல்படும் இயற்கை வேளாண்மை, பசுமை இயக்கம், மனித உரிமை அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கம் முதலிய பல்வேறு இயக்கங்களோடு ஞானி இணைந்து செயல்படுகிறார்.  இவ்வகையிலும் இவர் தமிழ் மாணவர். 

new-ap9 r.JPG

 12.    இதுவரையிலான ஞானியின் 25-க்கும் மேற்பட்ட படைப்புகளையும் அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட சிற்றிதழ்களையும் அவர் தொகுத்து வெளியிட்ட பெண் எழுத்தாளர் சிறுகதைகளையும் பிறவகை தொகுப்புகளையும், ‘காவ்யா’ தொடர்ந்து வெளியிட்டு வரும் அவரது பெருந்தொகுப்புகளையும் முன்வைத்துப் பார்ப்பவர் எவரும் ஞானியின் வாழ்நாள் சாதனைகளைப் புரிந்து கொள்ள முடியும்.  தற்காலத் தமிழ் வரலாற்றோடு தன்னை முழுவதும் இணைத்துச் செயல்படும் நல்ல தமிழறிஞராக இவரை பிறர் மதிப்பிட முடியும்.  கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கண் பார்வை இல்லை எனினும் ஓய்வில்லாமல் உதவியாளர், நண்பர்களோடு இணைந்து இவர் ஆற்றி வரும் தமிழ்ப் பணிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 

13.    ஞானி தன்னளவில் ஒரு தமிழாசிரியராக, தமிழியல் ஆய்வாளராக இருந்துவிடவில்லை.  மாறாக, கோவை வட்டாரத்தில், வானம்பாடி இயக்கத்தோடு இருந்து, இயக்கப் பணியாற்றினார். பின்னர் ‘இலக்கிய ஆய்வரங்கு’ அதன்பிறகு ‘தமிழ்க்களம்’ அத்துடன் ‘தமிழ் அறிவியக்கம்’ இறுதியாக ‘தமிழிலக்கியப் பேரவை’ முதலிய தமிழ் அமைப்புகளை உருவாக்கியதோடு கோவை வட்டாரத்தில், சிறந்த ஆய்வாளர்களை, கட்டுரையாளர்களை, படைப்பாளிகளை உருவாக்கினார். தான் முனைவர் பட்டம் பெறவில்லை என்ற போதிலும் தகுதிமிக்க சில முனைவர் தகுதிக்கான ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலும் ஆய்வுக் கட்டுரைகளைத் தந்ததோடு சிலமுறை கருத்தரங்க சிறப்புரைகளையும் நிகழ்த்தியுள்ளார். விருதுகளை இவர் தேடிச் செல்லவில்லை என்றாலும் விளக்கு முதலிய பல விருதுகள் இவரைத் தேடி வந்தன. தற்போது இவர் பெற்ற விருது கனடாவில் உள்ள ஈழத் தமிழர்களின் தமிழிலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது 2009.