ஞானியின் படைப்புகள் - சில குறிப்புரைகள்
1. இந்திய வாழ்க்கையும் மார்க்ஸியமும் விவாதத்திற்கான ஒரு முன்னுரை – 1976
தனக்கு இன்றியமையாத தேவைகள் இல்லாமல் ஒருவன் மார்க்சியத்தை ஏற்கக்கூடாது என்று தொடங்கி இந்த நூலில் இந்திய வாழ்க்கைக்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான உறவை ஆராய்கிறார். இந்தியர்கள் நம்பிக்கை கொள்ளும் இறை என்பதன் உள்ளடக்கம் குறித்து ஆராய்கிறார். கடவுளின் உருவங்கள், சடங்குகள், கதைகள் முதலியவற்றுக்கு அப்பால் விரிந்திருக்கும் இறை (Being) குறித்து ஞானி பேசுகிறார்.
கடவுள் என்ற கருத்திற்கு ஆழ்ந்து சென்றால் பிரபஞ்சம், வரலாறு, சமூகம் என்பதைத்தான் தரிசிக்கிறோம் என்ற தாகூரின் கருத்தைத் தம் ஆய்விற்கு ஆதாரமாக ஞானி சொல்கிறார். வேற்றுமைக்குள் ஒற்றுமை என்ற இந்தியக் கலாச்சாரம் குறித்து நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானி. அனைத்தும் பிரம்மமென்றால் வர்க்க வேறுபாடுகள் முதலியவற்றை இந்தியச் சமயம் மற்றும் பண்பாடு மறுத்தாக வேண்டும். சமயங்கள் கூறும் மோட்சம் - முக்தி – நிர்வாணம் முதலியவை மனித விடுதலையைக் குறித்த கருத்தாக்கங்களாகவே இருக்க முடியும்.
இவ்வாறு இந்திய வாழ்க்கை என்பது மார்க்சியப் பார்வையின் வழியேதான் செரித்துக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியும் என்கிறார் ஞானி. மதங்களின் உருவங்கள் கலைத்து அவற்றின் ஆதாரங்களுக்குள் நாம் செல்லவேண்டும். அங்குதான் இறையை நமக்குள்ளும் காணமுடியும்.
2. மணல் மேட்டில் ஒர் அழகிய வீடு – 1979
புகழ்பெற்ற மெய்யியலாளராகிய ஜே. கிருஷ்ணமூர்த்தி குறித்து அவர் பாணியிலேயே எழுதப்பட்ட குறுநூல் இது. ஜே.கே.வின் நூல்களிலிருந்து திரட்டிய சுமார் முப்பது மேற்கோள்கள் – ஒவ்வொன்றின் மீதும் ஞானி தன்னுடைய கருத்துரைகளை எழுதுகிறார். ஜே.கே.வின் மீது ஆழ்ந்த மரியாதையோடு ஜே.கே. பற்றிய விளக்கங்களையும் விமர்சனங்களையும் ஞானி முன்வைக்கிறார். ஜே.கே.வின் நிதர்சனம் - விழிப்புணர்வை ஞானி ஏற்கிறார். நிகழில் மனிதன் இருக்கத்தான் வேண்டும். பழைய கருத்தோட்டங்களில் மனிதன் உறைந்து விடக்கூடாது. வர்க்கப் போர் சூழலிலும்ää மனிதனுக்கு விழிப்புணர்வின் அடிப்படையிலான ஞானம் தேவை. முன்னையதின் தொடர்பில்லாமல் மனிதன் இல்லை. முன்னையதின் தொடர்பிலிருந்து மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது தேவை மட்டுமல்ல சாத்தியமும்தான். ஜே.கே.வுக்குள் சமயமில்லை. எனினும் சமயத்தன்மை தொடர்கிறது. ஜே.கே.வுக்குள்ளும் தொலைவில் ஒரு கடவுள் இருக்கிறார். காலமற்றது, நமக்குப் புலப்படாதது? உட்காட்சி ஆகிய சொற்கள் வழியே இவர் தனக்குள் ஒரு கடவுளைக் கொண்டிருக்கிறார். மார்க்சியம் தனக்கு எதிரியாக ஜே.கே.வைக் கருத வேண்டியதில்லை. ஜே.கே.வின் ஆதாரத்தில் வாழ்வைக் கட்ட முடியாது எனினும் ஜே.கே.வின் ஒளி நமக்குத் தேவை.
3. கல்லிகை – 1984- 1986
எழுபதுகளின் தொடக்கத்தில் கோவையில் தோன்றி வளர்ந்த வானம்பாடி இயக்கத்தின் தூண்டுதலோடு ஞானி எழுதிய நீண்ட கவிதை – குறுங்காவியம் ‘கல்லிகை’ நவீன காலச் சூழலில் அகலிகையின் கதை புதுமைப்பித்தன் தொடங்கி எத்தனையோ எழுத்தாளர்களின் கைவண்ணத்தோடு புத்தாக்கம் பெற்றுள்ளது. ஞானியும் மார்க்சிய நோக்கில் கல்லான அகலிகையின் கதையை புதுக்கவிதை பாணியில் செய்திருக்கிறார். ஞானிக்குள் இயங்கும் கவித்துவத்திற்கு இந்தக் கவிதை சான்று. வரலாற்றில் உடமையும் அரசும் தோன்றிய காலத்திலிருந்தே மனிதன் தனக்குள் பிளவுபட்டு விட்டான். உடமையும் அரசும் ஒரு பக்கம் மனிதனை ஆதிக்கம் செய்ய மறுப்பக்கத்தில் மதம் அவனைத் தன் ஆதிக்கத்திற்குள் வசப்படுத்துகிறது. திசை தெரியாமல் மனிதன் திண்டாடுகிறான். வர்க்கங்கள் நிலவுகிற வரலாற்றுக்காலம் முழுவதும் மனிதனுக்கு இதுதான் விதி. உடமையும் அரசும் அழிகிற காலம் வரை இந்தக் கதியே தொடரும்.
அகலிகைக்குள் மனிதனுக்கு, ஏற்பட்ட அடிமைத்தனத்தை ஞானி காண்கிறார். ஒரு பக்கம் இந்திரன், மறுபக்கம் கௌதமன். இவர்களுக்கிடையில் அகப்பட்டு கல்லாகிறான். உடமையையும் அரசையும் துறந்து வரும் ராமனுக்காக அவன் காலமெல்லாம் காத்திருக்கிறான். இப்படிச் சொல்லுகிறது ஞானியின் கல்லிகை.
உடமையையும் அரசையும் இழந்த இராமன் ஏழைகளோடு பழம்குடிகளோடு உறவு கொண்டு, அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் இராவணனை அழிக்கிறான். அயோத்திக்கு அரசனான இராமனுக்குள்ளும் ஆதிக்கம் வலுபெற சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறான். இவ்வாறு இராம காதை குறித்தும் மார்க்சிய நோக்கில் ஒரு பொருள்கோளை முன்வைக்கிறார் இந்தக் கவிதையில் ஞானி.
கல்லிகை என்ற இந்த தொகுப்பு நூலில் ‘எனக்குள் ஒரு வானம்’ என்ற இன்னொரு கதைக் கவிதையும் அடங்கியுள்ளது. மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் தன் குடும்ப சூழலில் நேர்ந்த நெருக்கடியின் விளைவாக தனக்குள் அந்நியமாகித் தற்கொலை செய்து கொண்ட தன் நண்பர் தேவராஜின் கதையைச் சில மாற்றங்களோடு இந்த நீண்ட கவிதையில் சொல்கிறார். அந்நியமாதல் குறித்த மிக விரிவான பார்வையை இந்தக்கவிதை முன்வைக்கிறது. அந்நியமாதலில் அழுத்தம் கொள்ளாத கட்சி மனிதனுக்கு உதவி செய்வதில்லை. நளன் தர்மன் முதலியவர்களின் கதைகளையும் அந்நியமாதலின் வழியே ஞானி இந்தக் கவிதையில் சொல்கிறார்.
4. மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
1970 முதல் ஞானி எழுதிய சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட நானூறு பக்க அளவிலான கட்டுரை நூல் இது. கட்சி சார்ந்த மார்க்சியரின் பார்வையிலிருந்து ஞானியின் பார்வை முற்றாக வேறுபடுகிறது. மதத்தைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் கலை மற்றும் இலக்கியப் படைப்புகளையும் புரிந்து கொள்வதற்கு மார்க்சின் அந்நியமாதல் என்ற கோட்பாடு ஆதாரமாக விளங்குகிறது.
இத்தகைய ஆழ்ந்த பார்வையை முன்நிறுத்தி தமிழ் இலக்கிய ஆய்வை விரிவாகச் செய்கிறார் ஞானி. சங்க இலக்கியம் முதற்கொண்டு தற்கால இலக்கியம் வரை எல்லாவற்றையும் இந்த நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார் ஞானி. ஆதிப்பொதுமை சமூகத்தின் தொடர்பில்தான் சங்ககாலத்துக் கடை ஏழு வள்ளல்களை ஞானி காண்கிறார். உடமையும் அரசும் தொடர்ந்து மூவேந்தர்கள் வழியே ஆதிக்கம் பெற்ற காலம் சங்ககாலம் ஆதிப் பொதுமை சமூக அழிவை சங்கத் தமிழ்ச் சான்றோர்கள் ஏற்கவில்லை. உடமைக்கும் அரசுக்கும் எதிராக அவர்கள் பேசினார்கள். குடும்பத்திற்குள்ளும் உடமை சாதி முதலியவற்றுக்கு ஆதிக்கம் கிடைத்தபோது சங்ககாலம் அழிந்தது. பாணர்கள் மற்றும் புலவர்களுக்கு ஆதரவில்லை. பரத்தமைதான் இனி வாழ்க்கைமுறை. இப்படிச் சங்க இலக்கியத்தைப் பொருள்படுத்துகிறார் ஞானி. வள்ளுவரையும் இளங்கோவையும் கம்பரையும் ஆதிக்க வர்க்கத்தின் கருத்தியலை பரப்பியவர்களது கட்சி சார்ந்த மார்க்சியர் கருத்தை ஞானி ஏற்பதில்லை. வள்ளுவர் முதலியவர்களின் மக்கள் சார்பை விடாப்பிடியாக எடுத்துரைக்கிறார். சோழர் காலத்தில் எங்கும் இருந்த இராவணர்களுக்கு எதிராகத்தான் கம்பர் தன் காவியத்தின் மூலம் தன்னைத் திரட்டிக் கொள்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் கணியன் பூங்குன்றனார் முதற்கொண்டு வள்ளுவர் முதலியவர்கள் வழியே சித்தர்களுக்குள்ளும் தொடரும் சமத்துவம் - சமதர்மப் பார்வைக்கு அழுத்தம் தருகிறார் ஞானி. இந்த நீரோட்டம் புதுமைப்பித்தன் மற்றும் ஜெயகாந்தனுக்குள்ளும் தொடர்வதை எடுத்துக் காட்டுகிறார். எழுத்து தோற்றுவித்த புதுக் கவிஞர்கள் சமதர்மப் பார்வையை ஏற்காததில் ஞானிக்கு உடன்பாடில்லை. இயற்கையோடும் சமுதாயத்தோடும் கொள்ளும் ஆழ்ந்த உறவில்தான் மனிதன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறார். தனக்குள் ஆழ்ந்து செல்லும் பொழுது “யங்” முதலியவர்கள் கூறியபடி தனக்குள் சமுதாயத்தின் கூட்டு உறவைப் பெறுகிறான் மனிதன். இந்த அடிமனத்திற்குள் ஓடும் நீரோட்டம்தான் மனிதனுக்குள் கவித்துவமாகப் பொங்குகிறது. மனிதனின் படைப்பு இயக்கத்திற்கு மூலம் இந்தக் கவித்துவம்தான். மார்க்சியமும் இலக்கியமும் இணைவது இந்த இடத்தில்தான். வானம்பாடி இயக்கம் மார்க்சியத்தோடு கொண்ட உறவை இப்படித்தான் விளக்கமுடியும். கட்சி சார்ந்த மார்க்சியருக்கு இத்தகைய ஆழ்ந்த பார்வையில்லை. இந்த ஆழ்ந்த பார்வைதான் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக சித்தர்களைத் தோற்றுவிக்கிறது. பாரதிக்குள்ளும் ஒரு சிந்தனை ஞானி காண்கிறார். பாரதியின் கண்ணன் பாட்டு குறித்த இவரது ஆய்வு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட்டுகளின் கலை இலக்கியப் பார்வையை ஞானி தொடர்ந்து விமர்சனம் செய்கிறார். பிரதிபலிப்பு என்ற லெனினின் கோட்பாட்டில் எதிர்வினைக்கு இடம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சூழல்தான் மனிதனை மாற்றுகிறது என்பது ஒரு பாதி உண்மை. சூழலை மாற்றுபவன் மனிதன் என்ற மார்க்சின் கருத்தை ஞானி எடுத்துக் காட்டுகிறார். கட்சியின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்ட சோசலிச எதார்த்தவாதம் ஞானிக்கு உடன்பாடில்லை. கட்சி உருவாக்குவது மனிதன் மீது இன்னொரு வகை ஆதிக்கம். ஆதிக்கத்தை எப்பொழுதும் மறுப்பவன் கலைஞன். இப்படிச் செல்லுகிறது ஞானியின் பார்வை. இலக்கியத்திற்குள்ளும் இயங்கும் வரலாறு மற்றும் தத்துவம் குறித்து தொடர்ந்து எடுத்துரைக்கிறார் ஞானி.
5. தொலைவிலிருந்து – 1988
ஞானியின் குறும் கவிதைகள் பலவற்றைக் கொண்டது. இந்தத் தொகுப்பு வானம்பாடி இயக்கத்தின் தாக்கம் காரணமாக அவ்வப்பொழுது நேர்ந்த தன் வாழ்வியல் அனுபவங்களை இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். தன் குடும்பத்திற்குள்ளும்ää மார்க்சியக் கட்சியோடும் தனக்கு நேர்ந்த அனுபவங்கள்ää பாதிப்புக்கள் முதலியவைகளை இந்தக் கவிதைகளில் தன் ஆளுமையிலிருந்து விலகிய முறையில் ஞானி சொல்லியிருக்கிறார். நான் தொலைவிலிருந்து வருகிறேன். எந்தப் புல்லையும் மிதிப்பது கூட எனக்கு விருப்பமில்லை என்ற முறையில் தனக்கு ஆதிக்க உணர்வு அறவே இல்லாத ஒரு மனிதனின் பார்வையில் சில பல கவிதைகள் இயங்குகின்றன. கட்சிக்குள் மனிதன் எவ்வாறு சிறையுண்டு அவதிப்படுகிறான் என்பதையும் சோவியத் யூனியனின் சோசலிசம் என்ற பெயரில் மக்களுக்கு நேர்ந்துள்ள வேதனையையும் சொல்கிறார். அலங்காரங்கள் அறவே ஒதுக்கிய நடையில் நிறமற்ற கவிதைகளை இந்தத் தொகுப்பில் தந்திருக்கிறார். இவை கவிதைகள் அல்ல என்று புறக்கணிக்கக் கூடிய அளவிற்கு நிறமற்றன எனினும் மனிதனின் ஆழ்ந்த பார்வைகளை வெளியிடும் கவிதைகள் இவை. மார்க்சியத்திற்குள்ளும் ஆன்மீகப் பார்வைக்கு இடமுண்டு என்பதற்கு இந்தக் கவிதைகள் சான்று.
6. படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் - 1994
கண்ணாடி என்பது ஒரு அற்புதப் பொருள். உயர்ந்த கொதிநிலையில் மணலும் சுண்ணாம்பும் சேர்ந்துதான் கண்ணாடி ஆகிறது என்ற போதிலும் கண்ணாடி ஒரு மூன்றாவது பொருள். இது பாய்ச்சலின் விளைவு இது இயங்கியல் முறைக்கு ஒத்தது. இப்படித்தான் படைப்பை விளக்க வேண்டும்.
தொல்காப்பியத்தில் சொல்லப்படும் முதல், கரு, உரிப்பொருள்களையும் அகம் புறம் ஆகிய பிரிவுகளையும் நம் காலத்திற்கு ஒத்த முறையில் ஆழ்ந்த பொருளோடு விரிவுபடுத்துகிறார். நவீனத்துவம் என்றும் பின்நவீனத்துவம் என்றும் தமிழ் இலக்கிய ஆய்வுக்குள் புகுந்துள்ள புதிய பார்வைகளை படைப்பியல் நோக்கில் விளக்குகிறார். எதார்த்தவாதம் என்றைக்கும் உயிர்த்துடிப்போடு விளங்கும். நவீனத்துவம் என்ற பார்வையை எதார்த்தவாதம் உள்வாங்கிக் கொள்ளமுடியும். தமிழ் இலக்கியத்திற் குள்ளும் ஆண் ஆதிக்கம் உயர்சாதிப் பார்வை முதலியவை பதிந்துள்ளன. இவ்வகை ஆதிக்கப் பார்வையைக் களைந்து கொள்வதன் மூலமே நம் படைப்புத் திறன் மேம்படும் ஆதிக்கத்தைக் களைந்து கொள்வதாகிய பின் நவீனத்துவ பார்வை. மார்க்சியத்திற்கு எதிரானதன்று பின் நவீனத்துவத்துள்ளும் இயங்கும் இடதுசாரிப் பார்வையை மார்க்சியர் தழுவிக் கொள்ள முடியும்.
7. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1
சோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்ததை அடுத்து வரலாற்றில் தனி மார்க்சியத்திற்கு வாழ்வில்லை எனற் கருத்து சில வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் முதலாளியத்தின் ஊடுருவலைக் கொண்ட மார்க்சியத்திற்குத்தான் இப்படி தகர்வு நேர்ந்திருக்கிறது. மார்க்சியத்தின் உள்@ரை ஆற்றல்களை வளர்த்தெடுக்கக் கூடிய வாய்ப்பு இப்பொழுது நேர்ந்திருக்கிறது. ஞானியின் மார்க்சிய ஆசானாகிய தோழர் எஸ்.என்.நாகராசன் அவர்களின் இவ்வகைக் கரத்தை ஞானி ஏற்றுக்கொண்டு தமிழகச் சூழலில் நேர்ந்துள்ள பண்பாட்டு நெருக்கடிகளை வளமான மார்க்சிய நோக்கில் ஆராய்கிறார்.
தமிழகத்தில் சில வட்டாரங்களில் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் குறித்து தீவிரமான விவாதங்கள் எண்பதுகளின் இறுதியில் எழுந்துள்ளன. இவர்கள் மார்க்சியத்தை பேருருவக் கருத்தியல் என்றும் பேருருவக் கருத்தியலுக்கு வரலாற்றில் இனி இடமில்லை என்றும் தலித்தியம் முதலிய நுண்ணுருவ கருத்தியலுக்குத்தான் இனி இடமுண்டு என்று கூறி மார்க்சியத்தை ஒதுக்குகின்றனர். ஆதிக்கம் எந்த வடிவத்தில் திரட்சி பெற்றாலும் அதை மார்க்சியம் ஏற்பதில்லை என்ற நோக்கில் மேற்குறித்த விவாதங்களை ஞானி இந்த நூலில் எதிர்கொள்கிறார்.
சாதி, மதம், பார்ப்பனியம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கும் பெரியாரியம் தனிஉடமை அரசு ஆதிக்கம் முதலாளியம் - சந்தைப் பொருளாதாரம் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல், நுகர்வு வெறி, இயற்கை அழிவு முதலியவற்றை எதிர்ப்பதில்லை. இதற்குக் காரணம் முதலாளியம் பெரியாரியத்திற்குள் தங்கி விட்டது. பெரியார் முன்வைத்த சமதர்மம் என்ற கருத்தியலுக்கு அழுத்தம் தருவதன் மூலம் பெரியாரியத்தை வளர்க்க முடியும்.
சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் முதலாளியத்தின் சுரண்டலும் அரசின் ஒடுக்குமுறையும் தொடர்ந்து அதிகரிக்கிற சூழலில் தலித் மற்றும் பெண்கள் மீது ஒடுக்குமுறை இனிப் பல மடங்கு அதிகரிக்கும் அன்றியும் தமிழகத்தில் தமிழ் மற்றும் தமிழ் தேசியத்திற்கும் ஆபத்து அதிகரிக்கும். இவற்றை ஞானி பண்பாட்டு நெருக்கடிகள் என்று குறிப்பிட்டாலும் இவரே நூலில் முன்னுரையில் குறித்தபடி இவை மெய்யியல் நெருக்கடிகள்.
சமதர்மத்திற்கு அழுத்தம் தருகிற மார்க்சிய பார்வையை ஆழப்படுத்துவதன் மூலம் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம் முதலிய கருத்தியலுக்குள் தங்கியுள்ள முதலாளியத்தை வெளியேற்ற முடியும் என்று இந்த நூலில் விவாதிக்கிறார் ஞானி. ஞானியின் மிகச் சிறந்த படைப்புகளில் இந்த நூல் குறிப்பிடத்தக்கது.
8. எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
எண்பதுகளில் வெளிவந்த சுமார் முப்பது எழுத்தாளர்களின் அறுபத்து ஐந்து நாவல்களை ஆய்கிறது இந்த நூல். இலக்கிய ஆய்வில் குறிப்பாக நாவல் பற்றிய ஆய்வில் புதிய அணுகுமுறைகள் எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே தமிழ் இலக்கியச் சூழலுக்குள் வந்து விட்டன. நான்கு புறமும் இழுத்துக் கட்டக்கூடிய ஒரு கூடாரம் போல் மையத்தோடு எல்லாவற்றையும் இணைப்பதாகிய பல திறக் கூறுகளோடு கூடிய கதையமைப்பு தேவையில்லை. ஒரு நாவலுக்கு மையம் தேவையில்லை, கதை கூடத் தேவையில்லை. நாவலில் ஒரு கதாநாயகனை மற்றவர் சுற்றி வருகிற மாதிரி கதையமைப்பு தேவையில்லை. இவ்வகைக் கதையமைப்பு ஏதோ ஒரு வகையில் ஆதிக்கத்தை கட்டமைக்கிறது. நாவலில் எல்லா மனிதர்களும் சமமான முக்கியத்துவமுடையவர்கள்.
ஒரு நாவலுக்குத் தொடக்கம் என்று எதுவுமில்லை. அதேபோல நாவல் ஒரு கட்டத்தில் முடிவு பெறவேண்டும் என்பதுமில்லை. நாவல் என்பது சமூக மாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது கூட தேவையில்லை. இப்படிப் புதிய நோக்குகளில் இலக்கிய ஆய்வுகள் வந்திருக்கின்றன. இந்த நோக்கை தன் கருத்தில் கொண்டு எண்பதுகளில் நாவல்களை ஞானி ஆராய்கிறார். அசோகமித்திரன், சா. கந்தசாமி, சங்கரநாராயணன் ஆகியவர்களின் நாவல்களை இவ்வக நாவல்கள் என்று ஞானி குறிப்பிடுகிறார். எதார்த்தவாதத்திற்கு இன்னும் தேவை இருக்கிறது என்ற முறையிலும் இந்திரா பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், சு. சமுத்திரம் போன்றோரின் நாவல்களை ஞானி பாராட்டுகிறார். ராஜம் கிருஷ்ணன் தமிழ் சமூகத்தில் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை பெருமளவு செய்தவர் என்ற முறையில் தமிழ் நாவலாசிரியர்களின் முன் வரிசையில் அவரை வைக்கிறார் ஞானி.
கலைப்படைப்பு என்ற முறையில் குறைபாடுகள் பல இருந்த போதிலும் சமூக நீதிக்கு தொடர்ந்து அழுத்தம் தருவதற்காக சு. சமுத்திரத்தை ஞானி பாராட்டுகிறார். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் முதல் ஞானி எடுத்துரைக்கிறார். தமிழுக்கு இத்தகைய ஆய்வுகள் பெரிதும் தேவை.
9. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை – 1996
பிரபஞ்சம் வரலாறு தனிமனித வாழ்க்கை ஆகியவற்றில் புதிர்கள் நிலவும் காலம் வரை கடவுள் என்ற கருத்தாக்கம் திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் என்ற கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள்.
பெரியாரியமும் கட்சி சார்ந்த மார்க்சியரும் கடவுள் என்ற கருத்தாக்கத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவை குறித்து ஆழ்ந்த பார்வை கொள்வதில்லை. இதன் காரணமாக கடவுள், மதம், புராணம் ஆகியவற்றின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை இவர்களால் மாற்ற முடியவில்லை என்று விவாதிக்கும் ஞானி இந்த நூலில் பெரியாரியம் குறித்தும் கட்சி சார்ந்த மார்க்சியர் குறித்தும் விரிவான விவாதங்களை முன்வைக்கிறார்.
ஞானி தன் இளமைக் காலத்தில் அத்வைதம் குறித்த அனுபவம் பெற்றதை ஆதாரமாகக் கொள்கிறார். அத்வைதம் என்பது ஒரு சிகர அனுபவம். அதைப் பொருளியல் மற்றும் சமூக தளத்திற்கு கீழ் இறக்கும் பொழுது சமதர்மம் என்ற பார்வை அழுத்தம் தரமுடியும். விவேகானந்தர், பாரதி ஆகியவர்கள் இப்படிச் செய்தவர்கள். கிறித்துவத்துக்குள் உள்ள விடுதலை இறையியலை இந்து மதத்திற்குள் காணமுடியவில்லை என்கிறார் ஞானி. பின்நவீனத்துவம் முன்வைக்கிற கட்டுடைத்தல் என்ற அணுகுமுறை ஞானியின் ஆய்வுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
10. தமிழில் நவீனத்துவம், பின்நவீனத்துவம் - 1997
இந்த தொகுப்பின் முதல் கட்டுரை தமிழில் நவீனத்துவம் என்ற பொருள் பற்றியது. பிற கட்டுரைகள் மார்க்சியமும் இலக்கியமும், மார்க்சியம் ஒரு மறுபார்வை, தமிழ் மரபின் தடங்கள் முதலியவை.
நவீனத்துவம் மட்டுமல்லாமல் பின்நவீனத்துவத்தையும் கட்சி சார்ந்த மார்க்சியர் மறுக்கின்றனர். பின்நவீனத்துவம் முன்வைக்கும் பிரதி புனைவு கட்டுடைத்தல் முதலிய கருத்தாக்கங்களை ஞானி ஆராய்ந்து இவ்வகை ஆய்வு மார்க்சியத்திற்குப் புறம்பானதன்று என்பதோடு இலக்கியம் குறித்த மார்க்சிய ஆய்வை இவை வளப்படுத்தும் என்று கூறுகிறார்.
‘சு. சமுத்திரத்தின் வாடாமல்லி’ ‘எம்.வி. வெங்கிடராமின் காதுகள்’ ‘தமிழவனின் சரித்திரத்தில் படித்த நிழல்கள்’ முதலிய படைப்புகளை ஆராய்ந்து தன் கருத்துக்களை நிறுவுகிறார். பின்நவீனத்துவத்தினுள் செயல்படும் வலதுசாரி போக்கை ஞானி மறுக்கிறார்.
தமிழ் மரபின் தடங்கள் என்ற கட்டுரை திராவிட இயக்கம் குறித்த விரிவான ஆய்வை முன்வைக்கிறது. பெரியார் தோற்றுவித்த இயக்கம் திராவிட இயக்கத்தின் ஒரு கிளை மட்டுமே. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை முதலியார் மூலம் வெளிப்பட்டது. சைவ சமயம் சார்ந்த இன்னொரு கிளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியலுக்கு அழுத்தம் தரும் இன்னொரு கிளை. இன்று வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது மேலும் ஒரு கிளை.
11. புதிய தரிசனங்கள் - கலையும் அரசியலும் - 1997
புதிய தரிசனங்கள் வெளிவந்தவுடன் சாகித்திய அகாதெமி தேர்வுக்கு இந்நாவல் தகுதியுடையது என்று கண்டு நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களைக் கலந்து கொண்டு நாவலாசிரியருக்கு வந்த கடிதங்கள்ää இந்த நாவல் குறித்து பத்திரிக்கைகளில் வந்த மதிப்புரைகள் மற்றும் புதியதாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்ற முறையில் ஞானி இந்த நூலைத் தொகுத்திருக்கிறார்.
ஆயிரத்தித் தொள்ளாயிரம் பக்க அளவில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்தப் பெரிய நாவல் 1975-இல் இந்திரா காந்தி பிறப்பித்த நெருக்கடிச் சூழலைக் கருப்பொருளாகக் கொண்டு அமைகிறது இந்த நாவல். அவசர நிலையை மையப்படுத்தி தமிழில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற போதிலும் அனேகமாக வேறு எந்த மொழியிலும் இத்தகைய பெரிய நாவல் தோன்றியிருக்க இயலாது. தமிழ்நாட்டின் தென்மாவட்டமொன்றில் நெருக்கடி காலத்தில் இரண்டு பெரிய சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற வன்முறையுடன் கூடிய போராட்டங்களை இந்த நாவல் சொல்கிறது. வளர்ச்சி பெற்ற நாடார் சமூகத்தினருக்கும் ஒழிக்கப்பட்ட மள்ளர் சமூகத்தினருக்கிடையில் பல்வேறு போராட்டம். போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் அகண்ட காவிரி போல பரந்து செல்லும் கதையமைப்பு. இந்திராகாந்தியை நம்பிப் பின்சென்ற வலதுசாரி கம்யூனிஸ்ட்டுகளுக்கு தோல்வி. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய உள்ளார்ந்த விமர்சனங்கள் தலித்தியம் பெண்ணியம் என்னும் சில போக்குகள் தமிழில் மகத்தான நாவல்களுள் ஒன்று என்ற பெருமையை இந்த நாவல் எளிதாகப் பெற்றது. இவற்றையெல்லாம் இந்தத் தொகுப்பி சொல்கிறது.
12. தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
இந்தியாவில் கூட்டாட்சி ஏற்படவில்லை. சோசலிசமும் கைவிடப்பட்டது. இந்தியாவில் செயல்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் முதலியவை முதலாளியப் பெருக்கத்திற்குக் காரணமாயின. பல்வேறு மாநிலங்களுக்கிடையில் சமச்சீரான வளர்ச்சியில்லை. கிழக்கு மாநிலங்கள் முதலியவை புறக்கணிக்கப்பட்டன. மக்களாட்சி முறை உறுதிப்படவில்லை. ராணுவம் உட்படப் பெருகி அரசு நிர்வாகம் மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் அதிகரித்தது. மாநிலங்களின் அதிகாரங்களையும் மைய அரசு பறித்தது. மாநிலங்களின் மொழி, கலாச்சாரம், பொருளியல் முதலிய தேவைகள் மதிக்கப்படவில்லை. இப்படிப் பல்வேறு காரணங்கள் காஷ்மீர் பஞ்சாப் எனத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாட்டிலும் இப்படி தேசிய இனப்போராட்டங்கள் தொடர்ந்து எழுச்சி விடுதலைக்கான தேவை முதலியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூலை தமிழியம் என்ற அமைப்பு சார்பில் ஞானி தொகுத்துள்ளார். தோழர்கள் பி.ஆர். குப்புசாமி, கு.ச.ஆனந்தன், ஆனைமுத்து, மணியரசன், தமிழ்நாடன், எஸ்.என்.நாகராசன் ஆகியவர்கள் பேருரைகளைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூல். இது தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான வரலாறு, தத்துவம், பண்பாடு வாழ்வியல், இலக்கிய ஆக்கம் எனப் பல்வேறு போக்குகளை இந்த நூல் சொல்லுகிறது. தமிழ்த் தேசியம் குறித்த கருத்தியல் தெளிவிற்கு இந்த நூல் ஒரு முயற்சி.
13. கவிஞர் தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 1998
எழுத்து, கசடதபற இதழ்களுக்குப் பிறகு சமூக உணர்வோடும் படிமச் சிறப்போடும் கவிதை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழன்பன். வானம்பாடி இயக்கத்தின் ஆழ்ந்த பாதிப்போடு பத்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர் தமிழன்பன். பெரியாரியமும் மார்க்ஸியமும் இவரிடம் முழு அளவில் இணைந்துள்ளன. கவியரங்குகளில் இவர் முன்வைத்த அரசியல் கவிதைகளிலும், கவித்துவம் குறையவில்லை. பெரியார், பாரதியார், பாரதிதாசன் முதலியவர்களோடு மாவோ குறித்தும் அற்புதமாகக் கவிதை எழுதியுள்ளார். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் என்று இனம் காணத்தக்க உணர்வோடும் கவிதை வடித்துள்ளார். அண்மைக்கால கவிதைகளில் மெய்யியல் பார்வை மேலோங்கித் தெரிகிறது. அமெரிக்காவிற்குச் சென்று வந்தாலும் அதன் வல்லரசியப் போக்கைக் கண்டித்துக் கவிதை எழுதியுள்ளார். தற்காலத் தமிழ்க் கவிதையில் மகாகவி என்று ஒருவரை இனம் காண இயலவில்லை என்றாலும் ஒரு மகா கவிக்கான ஆற்றல்மிக்க சில கூறுகள் இவரது கவிதைகளில் தென்படுகின்றன. தமிழன்பனின் ஒட்டு மொத்தமானக் கவிதை குறித்து ஞானி எழுதியுள்ள இந்த நூல், ஞானியின் கவிதை பற்றிய பார்வையையும் வெளிப்படுத்துகிறது. தமிழன்பனின் முக்கியமான தொகுப்புக்களிலுள்ள சிறந்த கவிதைகளை ஞானி குறிப்பிட்டுள்ளார். தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் குறித்து தனி நூல்களின் தேவையை நம்மால் உணர முடியும்.
14. மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
ஷமார்க்சியம் என்பது வெறும் அரசியலா? அல்லது பொருளியலா? என்ற கேள்வியை ஞானி எழுப்புகிறார். மார்க்சியம் அரசியல் என்றால் இது எத்தகைய அரசியல் அல்லது இது எத்தகைய பொருளியல் என்றும் கேட்கிறார். மனிதர் மீது ஆதிக்கத்தைச்செலுத்துவது மார்க்சியத்திற்கு உடன்பாடா? சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது மார்க்சியத்திற்கு ஒத்து வருமா? சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் ஏன் நகர்ந்தது. ஸ்டாலின் காலத்துக் கொடுமைகளுக்கு என்னதான் தேவையிருந்தது. ஒரு கலாச்சாரப் புரட்சிப் போதாது ஆயிரம் முறை கலாச்சாரப் புரட்சிகள் தேவைப்படும் என்றார் மாவோ. மாபெரும் இயற்கையை அழிப்பதன் மூலமே எல்லோருக்குமான வாழ்வைத் தரமுடியும் என்பது உண்மை தான, மார்க்சியம் பற்றிச் சிந்திக்கும் பொழுது இப்படி எத்தனையோ கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அடிப்படையில் மார்க்சியம் என்பது எதுவாக இருக்கமுடியும். ஆதிக்கம் என்பது, ஆதிக்கத்திற்குள் ளாகிறவனையும் அழிக்கும். ஆதிக்கம் செய்கிறவனையும் அழிக்கும். சுரண்டலும் ஒடுக்குமுறையும் மனித வாழ்வை நாசமாக்கும். இவை எந்த வடிவிலும் நமக்கு வேண்டாம். போர்கள் வேண்டாம் என்பது போல போட்டியும் பொறாமையும் வேண்டாம். உழைப்பும் பகிர்வும் வாழ்வின் உன்னத அறங்கள். மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவது இந்த அறம்தான். இதுவே சோசலிசம். இந்த அறத்தை மனிதன் இழக்க முடியாது. ஆகவே வரலாற்றில் மார்க்சியத்திற்கு அழிவில்லை. இப்படி இயங்குகின்றன இந்த நூலின் கட்டுரைகள்.
15. மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் -
தமிழின் தொன்மை இலக்கியங்கள் என அறியப்படுகிற சங்க இலக்கியம் திருக்குறள், சிலப்பதிகாரம, மணிமேகலை, பெருங்கதை, கம்பர் காவியம் முதலிய பேரிலக்கியங்கள் இன்றுவரை தமிழ் மாணவர்களால் பெரும் விருப்பத்துடன் போற்றப் படுவதற்கான காரணம் எதுவாக இருக்கமுடியும். இவ்வகை இலக்கியங்கள் இன்றும் உயிர்த் துடிப்போடு விளங்குகின்றன. இதற்கான ஆய்வுமுறை நம் காலத்தில் மறுவாசிப்பு எனப்படுகிறது. வாசகர் என்ற முறையில் நமக்குள்ளும் ஒரு கலைஞரும் திறனாய்வாளரும் இயங்குவதை நாம் ஏற்கமுடியும். நம் கால வரலாறும் சமூகமும் சார்ந்த உறவுகள் நமக்குள்ளும் இயங்குகின்றன. இத்தகைய உணர்வோடுதான் தொன்மை இலக்கியத்தை நமக்கு ஒத்தமுறையில் நம் காலத்துக்கும் நம் அனுபவத்துக்கும் ஒத்தமுறையில் பொருள்படுத்துகிறோம். வள்ளுவர் மற்றும் இளங்கோவின் காலத்திற்குள் அவர்களின் வாழ்வியலின் அனுபவத்திற்குள் நுழைந்து நம்மால் பார்க்க முடியாது. பரிமேலழகரும் மற்றவரும் தம் காலத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்தமுறையில் வள்ளுவரை பொருள்படுத்தியது போலவே இன்று நமக்கு ஒத்தமுறையில் வள்ளுவர் முதலியவர்களை மறுவாசிப்பு செய்கிறோம். இத்தகைய வாசிப்பின் மூலமே தொன்மை இலக்கியங்கள் நமக்கு நெருக்கமாகின்றன. தமிழிலக்கியம் குறித்த இவ்வாசிப்பை ஞானி இக்கட்டுரைகளில் முதன்மைப படுத்துகிறார். ஞானியின் முக்கிய நூல்களில் இதுவும் ஒன்று.
16. எதிர் எதிர்க் கோணங்களில் தத்துவம், மதம், மானுடம் - 2002
தத்துவம், மதம், மானுடம் ஆகியவற்றினுள் எத்தனையோ கேள்விகள் ஒன்றை மறுக்கும் இன்னொரு கேள்வி. ‘மதம் வாழ்வுக்குப் பொருள் சொல்கிறது. ஒரு பொருள் இல்லை. பல பொருள்கள். தத்துவம் மனிதனை ஆராய்கிறது. தத்துவம் ஒன்றில்லை. தத்துவங்களும் பல. மதங்களும் பல. வாழ்வுக்கு என்ன அர்த்தம். இந்தக் கேள்விக்கும் பல விடைகள். ஒவ்வொன்றினிள்ளும் உண்மையில்லாமலும் இல்லை. முரண்பாடுகள் இல்லாமல் இயக்கம் இல்லை. வாழ்க்கை இல்லை. ஆய்வென்பது இப்படி இயங்குவதுதான் ஆய்வுக்கும் முடிவில்லை.
இந்த நூலில் பல வகையான கட்டுரைக ள காந்தியமோ? மார்க்சியமோ? என்பது ஒரு கட்டுரை. மதமா? மானுடமா? என்பது ஒரு கட்டுரை. ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் ஒரு கட்டுரை. பேரறிஞர் பெர்னாட்ஷா , பற்றியும் ஒரு கட்டுரை. பெர்னாடஷா ஒரு விஞ்ஞானி என்கிறது கட்டுரை. இருத்தலியல் மேற்கத்திய தத்துவம் நமக்கும் தேவைதான் என்கிறது இந்தக் கட்டுரை. பார்ப்பனியம் ஒழியுமா? ஒழிக்கத்தான் வேண்டுமா? இப்படி ஒரு கட்டுரை. முதலாளி சுரண்டுகிறான். சோசலிசக் கட்டத்திலும் சுரண்டல் இல்லாமல் முடியாது. சுரண்டல் எப்போது ஒழியும். எதிர்எதிர்க் கோணங்களில் ஆய்வு தேவைதான்.
17. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு – 2002
தமிழ்க் கவிதைகள் பற்றி தமிழ்க் கவிஞர்கள் பற்றி நிறையவே ஞானி எழுதியிருக்கிறார். ஒருவரின் தமிழ்க் கவிதை பற்றி ஞானி ஏதாவது மதிப்பீட்டை முன்வைக்கிறாரா? இப்படி செய்வது அவரது ஆய்வுமுறை அன்று. எந்த ஒரு கவிஞருக்குள்ளும் அவர் தேடுவது கவித்துவம். கவித்துவம் இல்லாமல் எந்த ஒரு மனிதனும் இல்லை. ஒரு கவிஞன் தனக்குள் இருக்கும் கவித்துவத்தை முதலில் கண்டு கொள்கிறான். பிறகு அதற்கு வசப்படுகிறான். அப்புறம் கவிதை செய்யாமல் அவனால் இருக்க முடியாது. கவித்துவம் ஆழ்மனத்திலிருந்து பொங்குகிறது. இந்த ஆழ்மனம் தனி ஒரு மனிதனுக்கானதில்லை. யங் கூறுவது போல இது சமுதாயத்தின் ஆழ்மனம், நனவிலி மனம். இந்த மனத்திற்குள் இறங்கியவுடன் கவிஞன் தன்னை இழக்கிறான். சமுதாயத்தினுள் வரலாற்றினுள் கரைந்து விடுகிறான். இவனுக்குள் இருப்பவன் ஆதிமனிதன் இவன் சித்தன் . இவன் புத்தன் இவனுக்குள் வானமும்பூ மியும் வசப்படும். வாழ்வின் பேரழகில் தன்னை இழப்பவன். இவன் அசலான கவிஞன். இவன் மெய்யியலாளன் கவிதை எனத் தொடங்கி மெய்யியலில் கரைவது கவிதை. இந்தப் பார்வையோடு இந்த நூலின் கட்டுரைகள் விளங்குகின்றன.
18. தமிழ், தமிழர் தமிழ் இயக்கம் - 2003
உலகமயமாதல் முதலிய கடுமையான நெருக்கடிகளுக்கிடையில், 5000,10000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெடுங்கால வரலாறும் வாழ்வியல் மேன்மைகளும் கொண்டவர்கள் என்ற முறையில் தமிழர்களாகிய நாம் நம்மை எவ்வாறு இன்றைய நெருக்கடிகளுக்கிடையில் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற கூர்மையான கேள்வியை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி ஞானி இந்த நூலில் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். நமக்கு வாய்த்த சங்க இலக்கியம் எத்தகைய அற்புதமான இலக்கியம்! தமிழ் இலக்கணத்தின் மேன்மையை எப்படி விளக்க முடியும்! தமிழிசையும், தமிழ் மருத்துவமும் எத்தகைய நுட்பம் வாய்ந்தவை. தமிழரின் சிற்பக் கலைக்கு இணை சொல்ல முடியுமா! கிரேக்கம், சீனம் முதலிய தொன்மை நாகரிகத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாதது தமிழ் நாகரிகம்! இன்றைய நெருக்கடிகளுக்கிடையில் இவற்றை நாம் இழந்துவிட முடியுமா? கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக தமிழ் இல்லை. கோவில்களிலும் தமிழ் இல்லை. ஆங்கில ஆதிக்கத்திற்கும் அளவில்லை. வள்ளுவரை இளங்கோவை இன்று யார் மதிக்கிறார்கள்? தமிழ்க் கல்விக்கு இன்று என்ன இடம்? எப்படி நமக்கு இந்தக் கதி நேர்ந்தது? இந்த நெருக்கடியிலிருந்து அரசு நம்மை மீட்குமா? தமிழ் இயக்கங்கள் நம்மைக் காப்பாற்றுமா? இவ்வகை நூறு கேள்விகளை எழுப்பி ஞானி ஆய்கிறார் இந்நூலில்.
19. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகள் குறித்து ஞானியின் திறனாய்வு நூல் இது. க.நா.சு. நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், லா.ச.ரா, எம்.வி. வெங்கட்ராமன் முதலிய மூத்த தலைமுறையினரின் நாவல்களும் இளம் தலைமுறையினரான ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ் , சங்கர நாராயணன், பாலகுமாரன், சின்னப்ப பாரதி, பொன்னீலன் முதலியவர்களின் நாவல்களும் (ஒரு சிலரின் நாவல்கள் முழுமையாகவும் மற்றவர்களின் நாவல்களில் ஒவ்வொன்றுமாக) ஆய்வுக்கு இந்த நூலில் ஞானியால் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஞானியின் ஆய்வுமுறை தனிச்சிறப்புடையது. நாவலுக்குள் தொடர்ந்து தேடிச் செல்லும் ஞானி, நாவலில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்கள் எத்தகைய வரலாறு மற்றும் சமூகச் சூழலோடு உறவுடையன என்பதை முதலில் பார்த்துக் கொள்கிறார். பின்னர் நாவலாசிரியரின் கருத்தியல் தளத்தினுள் அகப்படும் வரலாறு மற்றும் சமூகச் சிக்கல் குறித்து ஆய்வு செய்யும் ஞானி, சில சமயங்களில் இவர்களையும் கடந்து வரலாற்றுக்குள் தேடுகிறார். நாவலாசிரியரின் வரையறைக்குட்பட்ட கருத்தியலை கேள்விக்குட்படுத்துவதோடு நாவலாசிரியரின் பார்வை மேலும் விரிவுபடுவதன் மூலம் இன்னும் சிறந்த நாவலை, மனிதர்களைப் படைத்திருக்க முடியும் என்று சொல்லுகிறார். நாவல் ஆய்வில் ஞானி தரும் வெளிச்சம் இது. திறனாய்வு என்றால் என்ன என்பதற்கு இக்கட்டுரைகள் தக்க சான்று.
20. தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2003
சித்தர் இலக்கியத்தை நெடுங்காலத் தமிழிலக்கியத்தின் மையம் எனப் பொருள்படுத்தும் முறையில் இந்த நூலில் உள்ள ஞானியின் கட்டுரைகள் பலவும் அமைகின்றன. சித்தர்களுக்கு சாதியில்லை, மதமி ல் லை சடங்குகளில்ல, சித்தர்களுக்கு இறை உணர்வு உண்டு என்ற போதிலும் அவர்கள் இறைவனுக்கு வடிவமில்லை வழிபாடு இல்லை, சித்தர்களுக்கு மதமில்லை. மயக்கங்களில்லை. இம்முறையில் ஆயும்பொழுது வள்ளுவருக்குள்ளும் இளங்கோவுக்குள்ளும் சாத்தனாருக்குள்ளும் சித்தரைக் காணமுடியும். கணியன் பூங்குன்றனும் ஒரு சித்தர். சங்கத்தமிழ்ச் சான்றோர்கள் தனியுடமைக்கு அரசதிகாரத்திற்கு இடம் தரவில்லை. பக்தி இலக்கியத்தினுள்ளும் நாம் என்ன பார்க்கிறோம். இறைவன் அன்பு மயமானவர். அன்பே கடவுள். அன்பிற்கு கட்டுப்பட்டவர் கடவுள். கம்பரின் கடவுள் வேறுபட்டவரா? தமிழ்நெறி என்பது தமிழறமன்றி வேறு என்ன தாயுமானவர், வள்ளலார் இவர்களின் நெறியில் வைத்துத்தான் பெரியாரை ஜெயகாந்தனை புதுமைப்பித்தனைக் காணமுடியும். தமிழரின் வாழ்வியலுக்கு தடம் எது? திசை எது? என்ற தேடலில் ஞானி என்ன காண்கிறார். தமிழ்நெறி என்பது சித்தர் நெறி, சமத்துவ நெ றி , சமதர்ம நெ றி , சாதி நமக்கு வேண்டாம். எவ்வகை ஆதிக்கமும் வேண்டாம். உழைப்பும் பகிர்வுமே உயரறம்.
21. நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது விவேகானந்தர், ‘அரவிந்தர் முதலியவர்களை ஆழ்ந்து கற்றதன் விளைவாக நானும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சமயம் தன்னையும் பிரம்மம் என ஞானி கண்டு உணர்ந்தார். இளம் வயது முதற்கொண்டு பெரியவர்களும், சமயவாதிகளும் தனக்குள், தன் ஆழ்மனத்தினுள் திணித்ததாகிய கடவுள் பிம்பத்தையே, தியானத்தின் போது தன் அகத்திலும் புறத்திலுமாக தனக்கு அனுபவப்பட்டது பற்றி ஞானி பேசுகிறார். வில்லியம் ஜேம்ஸ் தந்த விளக்கம் இது என்கிறார். தன் ஆழ்மனத்தினுள் பதிந்த கடவுள் பிம்பம் என்பது ஒரு கனத்த, செறிவான பேருணர்வு - இது எப்படி பொருள்படுத்துவது, புரிந்து கொள்வது என்று ஞானி தேடுகிறார். பிரபஞ்சம், வரலாறு, இயற்கை, மனிதவாழ்வு முதலியவற்றினுள் அறிவியல் முதலியவற்றின் துணை கொண்டு எவ்வளவு தேடினாலும் இன்னும் விளங்காத புதிர்களில்தான் கடவுள் இன்னும் வாழ்கிறார். நாற்பதாண்டுகளாக ஞானி தனக்குள்ளும் வெளியிலும் கடவுளைத் தேடிய அனுபவத்தை இந்த நூலில் அருமையாக அழகாக விளக்குகிறார். கடவுள் ஒரு பெரும் புதிர். என்ன தேடினாலும் தெளிவுபடாத புதிர் என்கிறார் ஞானி.
22. வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
இருபதாம் நூற்றாண்டுச் சூழலில் வைத்து வள்ளுவரை நாம் வாசிக்கிறோம். வள்ளுவர் நமக்கு நெருக்கமாக வருகிறார். வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? முதற்குறளில் அவர் ஆதிபகவனைப் போற்றுகிறார். இவர் கடவுள் இல்லை. அடுத்து மழையைப் போற்றுகிறார். பற்றுகளைத் துறந்தவரைப் போற்றுகிறார். அறங்களைப் போற்றுகிறார். இல்லறமே முதன்மையானது. துறவுக்கு அடுத்த இடம்தான். குழந்தைகளைக் கொஞ்சுகிறார் வள்ளுவர். தாய்மையைப் போற்றுகிறார். போலித் துறவுகளைக் கண்டிக்கிறார். விதியை மனிதன் வெல்ல முடியும் என்கிறார். ஈவதால் மேலுலகம் இல்லை என்றாலும் கொடு என்கிறார். செல்வத்துப் பயன் ஈதல் என்கிறார். குளத்தில் நிறைந்த நீர் ஊரவர் அனைவருக்கும் பயன்படுவது போல ஒருவரிடம் தேங்கிய செல்வம் அனைவருக்கும் உரியது என்கிறார். தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதே துறவு என்கிறார். உழவரைப் போற்றுகிறார். இயற்கை மருத்துவம் பற்றிச் சொல்கிறார். துன்புறுத்தி வரி வசூல் செய்யும் மன்னவனைக் கள்வன் என்கிறார். வேல் வெற்றி தராது என்கிறார். சான்றோர்க்கு வறுமையே அழகு என்கிறார். ஊழி பெயரினும் தான் பெயராதவரே சான்றோன் என்கிறார். அறிஞனைப் பாராட்டுகிறார். அன்பைப் போற்றுகிறார். இவர்தான் இன்னும் நமக்குத் தேவைப்படும் வள்ளுவர்.
23. தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
மெய்யியல் என்ற உடன் இதை மதம் எனப் பகுத்தறிவாளர் தவறாகவே பொருள்படுத்துகின்றனர். இயங்கியல்தான் மார்க்சியத்தின் மெய்யியல் என்று மார்க்சியர் நம்புகின்றனர். இவ்வகையிலும் தமிழிலக்கியத்தினுள் இயங்கும் மெய்யியலை நம்மவர் காண்பதில்லை. வாழ்வின் அர்த்தம் தேடுவது மெய்யியல். சமயத்தின் வரையறைக்குள் மெய்யியல் அகப்படுவதில்லை. பகுத்தறிவாளனுக் குள்ளும் மார்க்சியனுக்குள்ளும் மெய்யியல் தேட்டம் இல்லாமல் அவர்கள் வாழ்வில் நிறைவு காண்பதற்கில்லை. மெய்ப்பொருள் நாயனாரை சேக்கிழார் சமயவாதியாகவே குறுக்கி விட்டார். அவருக்குள் இயங்கிய மெய்ப்பொருளை சேக்கிழார் காணவில்லை. பகைமை மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவதில்லை. பகைமைக்கு அப்பால் இயங்குபவன் மெய்யியலாளன். மெய்ப்பொருள் நாயனார் இப்படிச் செயல்படுகிறார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகள் மிக முக்கியமானவை. 1. சங்க இலக்கிய மெய்யியல் 2. வள்ளுவரின் மெய்யியல். அளவில்லாமல் மனிதனுக்குள் உற்பத்தியாகும் ஆசைகள் அறவே நீங்கிய நிலையில் மனிதன் இயற்கையின் ஒரு பகுதி ஆவான். ஒரு செடி போல – ஒரு மலர் போல – வள்ளுவர் கூறும் பேரா. இயற்கை இத்தகையது. வாழ்வுக்கு நிறைவு தருவது மெய்யியல். கோப்பெருஞ்சோழன் வேறு எப்படி மரணத்தை எதிர்கொண்டான். எத்தனை புலவர்கள் அவனோடு மாண்டனர்? எப்படி மாண்டனர்?
24. நிகழ் கட்டுரைக் களஞ்சியம் - 2009
நண்பர்கள் ஒத்துழைப்போடு 1983-இல் ‘நிகழ்’ இதழ் தொடங்கினாலும் 88’லிருந்து 96’ வரை ஞானி தன் சொந்தப் பொறுப்பில் நிகழ் இதழைக் கொண்டு வந்தார் 32 இதழ்கள். சோவியத்யூ னியனில் சோசலிச தகர்வைத் தொடர்ந்து மார்க்சியம் உலக அளவில் மரியாதை குறைந்த நிலையில் தமிழகச் சூழலில் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் குறித்து நண்பர்கள் பெரிதாகப் பேசினர். சோவியத் ஒன்றியத்தில் தகர்ந்தது, முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம்தான் என்றும் மார்க்சியத்திற்குள்ளிருந்தும் முதலாளிப் போக்கை வெளியேற்றுவதன் மூலம் மார்க்சியம். இனி செழிக்க முடியும் என ‘நிகழ்’ இதழில் ஞானி கட்டுரைகளை வெளியிட்டார். அரசியலுக்குää பொருளியலுக்கு முற்றான அழுத்தம் தரும் மார்க்சியம் தழைக்காது. பெரியாரியம் முதலியவற்றை மார்க்சியம் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியம் தன்னை வளப்படுத்திக் கொள்ள இயலும். இத்தகைய நோக்கத்தில் அரசியல், பொருளியல், ஆன்மீகம், இயற்கை வேளாண்மை, விடுதலை இறையியல் பற்றிக் கட்டுரைகள் பலவற்றை நண்பர்கள், அறிஞர்கள் ஒத்துழைப்போடு நிகழ் வெளியிட்டது. இலக்கியம் சார்ந்த படைப்புகள், திறனாய்வுகள், கவிதைகள, கதைகள், திறனாய்வு கட்டுரைகள், நூல் மதிப்புரை என்று ஏராளமாக வெளியிட்டது. தமிழகச் சிற்றிதழ் வரலாற்றில் நிகழின் சாதனை மிகப்பெரியது. இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் முதலியவற்றைத் தவிர்த்து பிறவகையான 95 கட்டுரைகளை ஆயிரம் (1000) பக்க அளவில் காவ்யா வெளியிட ஞானி ஏற்பாடு செய்தார். தரமான மொழியாக்கங்கள் வெளியிடப்பட்டன. மார்க்சிய பார்வைக்கு நெருக்கமாக உலக அளவிலான அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. இந்தக் கட்டுரைத் தொகுப்பிற்காக ஞானி பெரிதும் மகிழ்ச்சி அடைகிறார். இந்தத் தொகுப்பு உலகில் எந்த ஒரு மொழியிலும் வெளிவரும் தகுதி உடையது என்று ஞானி கருதுகிறார்.
25. செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
தமிழைச் செம்மொழியென இந்திய அரசு ஏற்பளித்த சூழலைää தமிழையும், தமிழ் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டு மேன்மையையும் முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு மாபெரும் வாய்ப்பு எனக் கண்ட ஞானி, சங்க இலக்கியத்தை செவ்வியல் நோக்கில் ஆராயும் முறையில் இந்த நூலில் தன் கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியவற்றிலிருந்து சான்றுகள் பலவற்றைத் தொகுத்து இன்றைக்கும் தமிழனைக் காக்க வல்லது என்ற முறையில் தமிழறம் என்பதை இந்த ஆய்வில் ஞானி முதன்மைப்படுத்துகிறார். ஞானியின் பார்வையில் தமிழறம் என்பது, நம் காலத்திற்குத் தேவையான சமதர்மம் என்பதை வலியுறுத்துகிறார்.
இனக்குழுச் சமூகம் அழிந்து தனியுடமையும் அரசதிகாரமும் முதன்மைப்பட்ட வரலாற்றுச் சூழலில், இனக்குழுச் சமூகத்தில் நிலவிய சமத்துவம்தான், ஏற்றத்தாழ்வு நிலவும் பின்னைய சமூகத்தினுள்ளும் தமிழ்ச் சான்றோர்களின் நெஞ்சில் நிலவிய நல்லறம் என்பதையும் இரண்டாயிரமாண்டு தமிழிலக்கியத்தினுள் இந்தத் தமிழறமே மனித வாழ்வின் சாரமாக நிறைபெற்றது ஃ நிலைபெறுகிறது என்பதை இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள் அனைத்திலும் தெளிவுப்படுத்துகிறார் ஞானி. ஞானியின் மிக முக்கியமான நூல்களில் இதுவும் ஒன்று.
26. தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
எந்த ஒரு இலக்கியப் படைப்பினுள்ளும் மையத்திலிருப்பவன் மனிதன். இந்த மனிதனை காதல் செய்யும் தலைவனாகவோ, அரசன் ஆணையை ஏற்றப் போரிடும் மறவனாகவோ அல்லது ஒரு துறவியாகவோ, ஒரு வணிகனாகவோ இலக்கியம் சித்தரிக்கும்போது, மையத்திலிருக்கும் மனிதன் கண்டுகொள்ளப்படவில்லை என்றுதான் கூறமுடியும். சமய இலக்கியங்களில் இவன் ஒரு சைவன் அல்லது வைணவனக் காவியத்தில் இவன் ஒரு மாவீரன். நாடுகள் பலவற்றை அரைகுறையாக குறுக்கியும் நீட்டியும் சித்தரிக்கின்றன. சங்க இலக்கியம் மோசமில்லை. நம் கால இலக்கியத்திற்குள்தான் மனிதன் கூடியவரை மனிதனாகி இருக்கிறான். சமயத்திலிருந்து ஆதிக்கத்திலிருந்து வணிகத்தனத்திலிருந்து காமத்திலிருந்து வம்பு வழக்கிலிருந்து இவன் தன்னை விடுவித்துக் கொண்டவனாகிறான். தனக்குள் இயல்பாகவே இவன் கவிஞனாக இருக்கிறான். இயற்கையை நேசிக்கிறான். தன்னை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறான். இவன் உழைப்பவன். உலகிற்கு அர்த்தம் வழங்குபவன். பிரபஞ்சத்தினுள் இவன் கறைந்தவன். தமிழிலக்கியத்தினுள் இவனை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தமிழிலக்கியத்தை என்றும் இவன்தான் செழிக்கச் செய்வான்.
27. வானம்பாடிகளின் கவிதை இயக்கம்
வரலாறும் படிப்பினைகளும் - 2011
இருபதாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த புதுக்கவிதை இயக்கத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது, கோவையில் 70’களில் தோன்றிய வானம்பாடிகளின் கவிதை இயக்கம். தோன்றி வளர்ந்த வேகத்தில் 100க்கணக்கான இளைஞர்களைக் கவிதை எழுத வைத்தது இந்த இயக்கம். மார்க்சிய நோக்கில் சமுதாய நெருக்கடிகளை வெளிப்படுத்தும் முறையில் வளர்ச்சிப் பெற்ற இந்த இயக்கத்தில் கவிஞர்கள் புவியரசு, சிற்பி, மேத்தா, அக்னிபுத்ரன், தமிழ்நாடன் முதலியவர்கள் முனைப்புடன் செயல்பட்டனர். இவர்களோடுகச ஞா னி, ஜனசுந்தரம், ஜீவஒளி முதலியவர்களும் தம்மை இணைத்துக் கொண்டனர். செல்லப்பா, க.நா.சு.
ந.பிச்சமூர்த்தி முதலியவர்கள் தோற்றுவித்த புதுக்கவிதை இயக்கத்தில் சமூக உணர்வை முதன்மைப்படுத்தும் முறையில் செயல்பட்ட வானம்பாடி இயக்கம் ஒரு திருப்பமாக அமைந்ததில் வியப்பில்லை. கவிதை இயக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் முதன்மைப்பட்ட நிலையில் கவிதை இயக்கம் பிளவுப்பட்டது. 22 இதழ்களே வெளிவந்த போதிலும் நெடுங்காலத் தமிழ்க் கவிதை இயக்கத்தில் வானம்பாடி இயக்கம் ஒரு மாபெரும் சாதனை என்று மதிப்பிடமுடியும். வானம்பாடி இயக்கத்தில் கவிஞராகவும்ää திறனாய்வாளராகவும் செயல்பட்ட ஞானி இயக்க வரலாறு மற்றும் படிப்பினைகள் குறித்து இந்த நூலைப் படைத்துள்ளார். ஞானியின் செறிவான திறனாய்வுப் பார்வைக்கு .இந்த நூல் நல்ல சான்று.
28. மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
இந்தத் தொகுப்பிலுள்ள மிக முக்கியமான ஒரு கட்டுரை “சமதர்மமா? பேரழிவா எது நமக்கான எதிர்காலம், உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் நாடுகள் பலவற்றை நம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருகின்றனர். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மாபெரும் இயற்கையை நாசம் செய்கின்றனர். நீரும், நிலமும் காற்றும் பேரழிவுகளுக்கு உள்ளாகின்றன. நுகர்விய வெறி மனிதனை கொலைகாரனாக கொள்ளைக்காரனாக மாற்றுகிறது. இத்தகைய இன்றைய வரலாற்றுப் போக்கை முற்றிலும் தடுத்தாக வேண்டும். இயற்கையின் வளங்கள் அனைத்தும் மனிதருக்குரியவை. கோடிக்கணக்கான மனிதர்களுக்கு நல்வாழ்க்கை தேவை என்றால் ஆதிக்கங்கள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும். மார்க்சியத்தின் உள்ளடக்கம் என்பது இதுதான். சமதர்மம்தான் மார்க்சியத்திற்கான ஒரே பொருள். இதில்தான் நம் எதிர்காலம் அடங்கியுள்ளது. மனித விடுதலைக்கான ஒரே நெறி மார்க்சியம். தமிழ்ப் பாமரனைப் பற்றிய கட்டுரையையும் மார்க்கோசு பற்றிய கட்டுரையிலும், ஸ்டாலின் பற்றிய கட்டுரையிலும் மார்க்சியம் பற்றி சமயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையிலும் உள்ளுறையாக இருப்பது மனித விடுதலைக்கான மார்க்சியம்தான். புத்தர், இயேசு, வள்ளுவர், வள்ளலார் - அனைவரும் நமக்குள் தூண்டுவது இந்த அறத்தைத்தான்.
29. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?
பெரியாரியம் கடவுள் இல்லவே இல்லை என்கிறது. மார்க்சியத்திற்குள்ளும் கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. தமிழகச் சூழலில் பகுத்தறிவாளர்களும் மார்க்சியரும் கடவுளை என்னதான் சாடினாலும் மக்கள் நெஞ்சில் கடவுள் நம்பிக்கை அழியவில்லை. இதற்கு என்ன காரணம் என்று இந்த நூலில் ஆய்கிறார் ஞானி. கல்லூரியில் படித்த காலத்தில் தியான அனுபவத்தின்போது ‘நான் பிரம்மம்’ என்ற பேருணர்வு ஞானிக்குள் ஏற்பட்டு பல வியப்பான உணர்வுகளை அனுபவித்த நிலையில் பின்னர் ஏற்பட்ட சில அனுபவங்களுக்குப் பிறகு கடவுள் நம்பிக்கையை ஞானி கைவிட்டது பற்றியும் இந்த நூலில் ஞானி எழுதுகிறார். மனித வாழ்வினுள்ளும் இயற்கையினுள்ளும் இன்றுவரை தீராதப் பல புதிர்களில் கடவுள் நம்பிக்கை தங்கியிருக்கிறது என்று கருதுகிறார் ஞானி. புகழ்பெற்ற சமயத்தலைவர்கள, அறிஞர்கள் எழுதியுள்ள சமயநூல்கள் பற்றி ஞானி இந்த நூலில் விரிவாக ஆராய்கிறார். அறிஞர் பலருடைய அனுபவங்களுக்குள் இடம்பெற்ற கடவுள் பற்றி கேள்வி எழுப்புகிறார். சமுதாய நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில்தான் புதிய சமயத் தலைவர்கள் புதிய கடவுளர்கள் உற்பத்தியாவதை விளக்குவர்.
30. ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்?
நெடுங்கால வரலாறும் மேன்மையும் உடையது தமிழ்நாடு என்றாலும் தமிழ்நாட்டில் இன்று தமிழுக்கு மரியாதை குறைந்து வருகிறது. பயிற்று மொழியாக தமிழ் இல்லை. ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கோவில் வழிபாட்டு மொழியாக தமிழ் இல்லை. மத்திய ஆட்சியில் தமிழுக்கு இடமில்லை. ஈழத் தமிழ் விடுதலைக்காக தமிழர் போராட முடியவில்லை. தமிழக அரசு தமிழை தமிழ் மக்களை தமிழ்நாட்டு இயற்கையை தமிழர்களின் தன்னுரிமையை காக்கும் திறன் உடையதாக இல்லை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. ஆங்கிலேயர் தன் இராணுவ வலிமையை பயன்படுத்தி வணிகத் தேவைக்காகவும் இந்தியா என்ற ஒரு தேசத்தை கட்டமைக்க முயன்றது. இந்தியா ஒரு துணைக்கண்டமே தவிர ஒரு தேசமாக உருவாகவில்லை. மாநிலங்களுக்கிடையில் ஒற்றுமையில்லை. வளர்ச்சிப் பெற்ற மாநிலம் மற்ற மாநிலங்களைச் சுரண்டுகிறது. மையத்தில் அதிகாரம் குவிந்திருக்கிறது. மையத்தை அண்டியே மாநிலங்கள் வாழமுடியும். இதன் காரணமாக மாநிலங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. தமிழ் மக்களுக்கும் தேவை விடுதலை என்கிறது இந்த நூல்
31. பரிமாணம் - கட்டுரைக் களஞ்சியம் - 2012
1978 முதல் 1985 வரை உலக அளவில் விரிவு பெற்று வந்த மார்க்சியம் குறித்து தமிழில் தொகுத்து உரைக்கும் முறையில் நண்பர்களோடு இணைந்து பரிமாணம் என்ற பெயரில் 14 இதழ்கள் வெளிவந்தன. இறுதி 3 இதழ்கள் எஸ்.வி. இராசதுரை அவர்களைக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்தது. சோவியத் மார்க்சியம் குறித்தும் சீன மார்க்சியம் குறித்தும் விரிவான ஆய்வுரைகள் திறனாய்வுடன் வெளிவந்தன. மேற்குலகில் புதிய பரிமாணங்கள் பலவற்றுடன் மார்க்சியம் சார்ந்த கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. இந்திய வரலாறு குறித்து இந்திய அளவில் மார்க்சிய அறிஞர் பலர் எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப் பெற்று வெளிவந்தன. தமிழகச் சூழலில் பெரியாரியம் பற்றிக் கம்பர் காவியம் குறித்தும் தமிழ் மெய்யியல் குறித்தும் மார்க்சிய நோக்கில் கட்டுரைகள் வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் நம் பார்வை என்ற தலைப்பில் ஆசிரியர் உரை வெளியாயிற்று. அந்நியமாதல் குறித்து எஸ்.என். நாகராசன், எஸ்.வி. ராசதுரை ஆகியோர்களின் கட்டுரைகளும் நேர்காணலும் வெளிவந்தன. கட்சி மார்க்சியர் சாதிக்காத ஒரு சாதனை பரிமாணம்.
32. புதுப்புனல் அகமும் புறமும் 2011-2013
ஞானி தான் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் 98 முதல் 2005 வரை இதழில் ஒரு பகுதியான அகமும் புறமும் என்பதில் தமிழுக்கு நேர்ந்து வரும் நெருக்கடிகள், கூடங்குளம், சேது சமுத்திரத் திட்டம், மான்சாண்டே விதைகள் முதலிய சிக்கல்கள், ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சிக்கல், தமிழறிஞர்களின் சாதனைகள் முதலியவை குறித்து கருத்துகளைச் சுருக்கமாகவும் செறிவாகவும் பதிவுசெய்தார். தமிழ்நேயத்தில் இப்பகுதியை தமிழ் வாசகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வந்தனர். ஞானி தனது ஆழ்ந்த மன உணர்வுகளை இங்கு பதிவு செய்தார். அமெரிக்காவின் ஆதிக்கம் அமெரிக்க அரசோடு இந்திய அரசு ஒத்துழைப்பு தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்நிலைப் போக்குகள் பற்றியும் எழுதினார். 250 பக்க அளவில் இந்தத் தொகுப்பை 2013 புதுப்புனல் வெளியிட்டுள்ளது.
2011-2012க் கால அளவில் மேற்கூறிய வகைப்பட்ட கருத்துகளை மிகுந்த தன் உணர்வுடன் புதுப்புனல் இதழில் ஞானி எழுதிய அகமும் புறமும் புதுப்புனலால் வெளியிடப்பட்டுள்ளன.